காலக்குளத்தில் குதிக்கும் கவனத்தவளைகள்
நாம்.ஆதாயமில்லாமல் பேசுவதும்,தொலைபேசுவதும்கூடப்
பல நேரங்களில் தவிர்க்கமுடியாததாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் சில
மனிதர்கள் நமை வியக்கவைக்கிறார்கள்.
பொன்வண்டு மார்க் பனியன் போட்ட மார்க்கெட்
சாந்துராஜ் தன் பனியனுக்குள் குட்டி ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோ பெட்டியைச்
சொருகிக்கொண்டு நாள் முழுக்க இளையராஜாவையும்,எம்.எஸ்.வீ.யையும் நெஞ்சிலே சுமந்து
‘’செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றலையும்..,கண்ணே கலை மானே..’’ பாடலையும்
முணுமுணுத்துக்கொண்டே கொக்கியால் அநாயாசமாக வெங்காய மூடையைத் தூக்கி நகர்த்தும்
ரசனை அருமையானது.
தச்சநல்லூரிலிருந்து அதிகாலை நான்கு மணிக்குக்
கிளம்பி இனிய காலைப்பொழுதின் ரம்மியத்தோடு ‘’உள்ளம் உருகுதையா..’’ வெண்கலக்குரலோடு
தேநீர் போடத் தாமிரபாய்லரில் வெந்நீர் கொதிக்கவைத்து இடைவெளியில்
எழுத்துக்கூட்டித் தலைப்புச் செய்தியை வாசித்துவிட்டு சமாதானபுரரவுண்டானாவில்
வந்துநிற்கும் லயன்பஸ் கண்டக்டரோடு நாட்டுநடப்பு பேசிவிட்டு டீ போட உற்சாகமாய்
நகரும் நெல்லையப்பன் அண்ணாச்சி எதற்கும் அயர்ந்து பார்த்ததில்லை.
கீழே டம்ளரை
வைத்துக்கொண்டு மேலே கைப்பிடிவைத்த டம்ளரை உயர்த்திப் பிடித்து ஒருசொட்டு
தேநீர்கூடக் கீழே சிந்தாமல் டீ ஆற்றும் அழகை அந்த அதிகாலை நேரத்தில்
பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
இருட்டும் வெளிச்சமும் சரிசமமாய் கலந்த
காலைநேரத்தில் பண்பலையில் பக்திப்பாடல் கேட்டபடி நகரப்பேருந்தில் டவுனுகுப் போய்
வந்ததும்,பேருந்து சுலோசனமுதலியார் பாலம் நெருங்குகையில் சில்லென்று முகத்தில்
அந்தத்தாமிரபரணி நதிஅள்ளிவீசும் சுகந்தக் காற்றும் இதமானது.
காலைப்பொழுது தேநீர்க் கடைக் காலைப்
பாடல்களாலும்,அச்சுமணம் வீசும்நாளேடுகலாலும் டீ போடும் நெல்லையப்பன்
அண்ணாச்சிகளாலும் தேநீர்அருவிகளைப் போல் அழகானதாகிறது.
சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி
No comments:
Post a Comment