Thursday, October 24, 2013



காதறுந்த ஊசி கூடக் கால் முள்ளகற்ற உதவும்.


 எதுவும் வீணில்லை இந்த வாழ்க்கையில்.நகர்ந்து போகிற இந்த மனிதப் பிரவாகத்தில் நாம் நீண்ட தொடர்ச்சியின் கனிவான கண்ணிகள்.

ரேசன் கடையில் மண்ணெண்ணை டின்னை நகர்த்துகிற மாதிரி காலம் நம்மை நகர்த்தி நகர்த்தி முன்னெடுக்கிறது.


இனம் தெரியாத மனிதர்களோடு சங்கமிக்க வைக்கிறது.மானிட சமுத்திரம் நானெனக் கூவக் கற்றுக் கொடுக்கிறது.


உரிமம் பெற்று வருகிற உறவுகளை விட உயிர்மம் பெற்று வரும் உறவுகள் உன்னதமனவையாய் அமையும் ரகசியம் அதுதான்.

அயல்நாடுகளுடன் நட்புறவு ஒப்பந்தம் போட அரசுப் பணத்தில் பறக்கிற அதிகாரிகளை விட சாலை நடுவில் ரத்தச் சகதியாய் செத்துக் கிடக்கும் நாயை அகற்றுபவன் அருமையானவன்.

மாதம்தோறும் குயில் நண்பர்களோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்லும்போது கண்ட அந்த மனிதர்கள் உன்னதமானவர்கள்.


மனவளர்ச்சி குன்றிய நூறு குழந்தைகளைப் பராமரித்து வரும் பெரிய கண்ணாடிபோட்ட அந்த மாமனிதர்,மொழியறியா மனவளர்ச்சிக்குன்றிய இளம்பெண்ணோடு அன்புபாராட்டும் அருட்சகோதரிகள்,மகன்களால்,மருமகள்களால் வீட்டை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட வயதான பாட்டிதாத்தாக்களை பராமரிக்கும் அந்த கல்லிடைக்குறிச்சி மாமனிதர் இப்படி எத்தனையோ முகம்தெரியாத உன்னத மாந்தர்கள் இந்த உலகிற்கு உயிர்மை தந்து கொண்டிருக்கிறார்கள்


.தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை தோறும் திருநெல்வேலி பேராட்சியம்மன் கோவில் அருகே உள்ள வறியவர்களுக்கு உணவளித்துவரும் தொன்நூற்றைந்தைந்து வயதுப் பெரியவர் வை.ஆறுமுகம் அவர்கள் என்னை வியக்க வைத்த மாமனிதர்.


காலையில் நான்கு மணிக்கு எழுந்து யோகா செய்து நூறு தோப்புக்கரணம் போட்டு உடற்பயிற்சி செய்து கடுக்காய் தண்ணீர் ஒரு செம்பு அருந்தி,ஆறு மணிக்கு அப்பர் தேவாரத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினால் நேரம் தெரியாமல் பக்கம் பக்கமாய் எழுதத் தொடங்குகிறார்.


உலகம் சுற்றிய தமிழ் அறிஞர்.திருஞானசம்பந்தர் தேவாரத்தை மொழிபெயர்த்து இரண்டாயிரம் பக்க நூலகத் தந்துள்ளார்.ஜி.யூ.போப் மொழிபெயர்த்த திருவாசகத்தை ஆயிரம் பக்க அளவில் மொழிபெயர்த்து அதை நூலாக்கி .ஜி.யூ.போப் கல்லறையில் கண்ணீர் சிந்தி வெளியீட்டு இங்கிலாந்தில் திருவாசகம் குறித்து ஆய்வுரைகள் வழங்கினார்.அமெரிக்காவில் அறிஞராய் போற்றப்பட்டு பெரும் புகழ் பெற்றவர்.


தள்ளாத வயதிலும் தமிழ்த்தொண்டு புரிந்து வரும் அய்யா பெரியவர் வை.ஆறுமுகம் அவர்கள் தற்போது அப்பர் தேவாரத்தை மொழிபெயர்த்து வருகிறார்.வறுமை நிலையில் உள 


்ள ஒரு பெண்குழந்தையை வளர்த்துப் படிக்க வைத்து கல்லூரி ஆசிரியராக உயர்த்தியவர் ஆறுமுகம் அய்யா அவர்கள்.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்கள்நம்முடன் இன்றும் இந்த ஊடக வெளிச்சமும் இன்றி வாழத்தான் செய்கிறார்கள்

செய்தித்தாளில் படம் வராத சேவையாளர்கள் சத்தமில்லாமல் மானுடத் தொண்டு புரியத்தான் செய்கிறார்கள்.


சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

அதிகாலை அதிசய மனிதர்கள் :சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி



காலக்குளத்தில் குதிக்கும் கவனத்தவளைகள் நாம்.ஆதாயமில்லாமல் பேசுவதும்,தொலைபேசுவதும்கூடப்  பல நேரங்களில் தவிர்க்கமுடியாததாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் சில மனிதர்கள் நமை வியக்கவைக்கிறார்கள்.


பொன்வண்டு மார்க் பனியன் போட்ட மார்க்கெட் சாந்துராஜ் தன் பனியனுக்குள் குட்டி ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோ பெட்டியைச் சொருகிக்கொண்டு நாள் முழுக்க இளையராஜாவையும்,எம்.எஸ்.வீ.யையும் நெஞ்சிலே சுமந்து ‘’செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றலையும்..,கண்ணே கலை மானே..’’ பாடலையும் முணுமுணுத்துக்கொண்டே கொக்கியால் அநாயாசமாக வெங்காய மூடையைத் தூக்கி நகர்த்தும் ரசனை அருமையானது.


தச்சநல்லூரிலிருந்து அதிகாலை நான்கு மணிக்குக் கிளம்பி இனிய காலைப்பொழுதின் ரம்மியத்தோடு ‘’உள்ளம் உருகுதையா..’’ வெண்கலக்குரலோடு தேநீர் போடத் தாமிரபாய்லரில் வெந்நீர் கொதிக்கவைத்து இடைவெளியில் எழுத்துக்கூட்டித் தலைப்புச் செய்தியை வாசித்துவிட்டு சமாதானபுரரவுண்டானாவில் வந்துநிற்கும் லயன்பஸ் கண்டக்டரோடு நாட்டுநடப்பு பேசிவிட்டு டீ போட உற்சாகமாய் நகரும் நெல்லையப்பன் அண்ணாச்சி எதற்கும் அயர்ந்து பார்த்ததில்லை.

 











கீழே டம்ளரை வைத்துக்கொண்டு மேலே கைப்பிடிவைத்த டம்ளரை உயர்த்திப் பிடித்து ஒருசொட்டு தேநீர்கூடக் கீழே சிந்தாமல் டீ ஆற்றும் அழகை அந்த அதிகாலை நேரத்தில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.


இருட்டும் வெளிச்சமும் சரிசமமாய் கலந்த காலைநேரத்தில் பண்பலையில் பக்திப்பாடல் கேட்டபடி நகரப்பேருந்தில் டவுனுகுப் போய் வந்ததும்,பேருந்து சுலோசனமுதலியார் பாலம் நெருங்குகையில் சில்லென்று முகத்தில் அந்தத்தாமிரபரணி நதிஅள்ளிவீசும் சுகந்தக் காற்றும் இதமானது.


காலைப்பொழுது தேநீர்க் கடைக் காலைப் பாடல்களாலும்,அச்சுமணம் வீசும்நாளேடுகலாலும் டீ போடும் நெல்லையப்பன் அண்ணாச்சிகளாலும் தேநீர்அருவிகளைப் போல் அழகானதாகிறது. 


சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி



Tuesday, October 22, 2013

அன்பான இதயங்கள்.............. சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி



மனக்குகை ஓவியங்கள்..1
முன் தயாரிப்பற்ற வாழ்வின் நகர்வுகளில் நாம் அடையாளம் காண்கிறோம் அன்பான இதயங்கள் பலவற்றை.
 

குடித்து முடித்த பின்னும் நாத்தேடுகிற இளநீர்த் துளிகளைப் போல் மனம் தேடிஅலைகிறது மாசுமருவற்ற நல்லமனிதர்களை.


இளக்கமாய் இருக்கிறவரைதானே எப்படி வேண்டுமானாலும் இந்த வாழ்வு நமை வசதியாய் வளைக்கும்?


 காற்று அசுரபலத்தோடு இருக்கும்போதும் சிலகணங்களில் நம்மால் மகிழ்வாகத் தூற்றிக்கொள்ளமுடியவில்லை.


எல்லோருக்கும் பிடித்துக் கொள்ள ஒரு சுட்டுவிரல் மிச்சமிருக்கிறது.

அனால் அந்தக் கரத்தைத்தேடித்தான் காலஓட்டம்.


கனிவாயிருக்கிறவரைக் களவாடப்படுகிறோம் எல்லோராலும்.
தெருக்குலையும்படியாக உருக்குலையும் உறவுகள்..


தொலைக்காட்சிகள் முழுக்கக் கொலைக்காட்சிகளாய் மாறியபின் இளந்தளிர்களின் வருடலும் பசுமையின் அடர்பச்சையும் நோக்கி மனம் பயணிக்கிறது.


எதற்கும் அச்சப்பட அவசியமில்லை ஆகாயம் இடிந்து விழுந்துவிடாது.
காத்திருக்கத்தான் வேண்டி இருக்கிறது கனியும்வரை.காலம் நமைக் கரையேற்றும்வரை.


நதி நனைத்த மண்ணில்தான் மண்ணோடு புணர்கிறது மண்வாசனை தேடும் மண்புழு.
 

நின்றுபோன கடிகாரத்தைத்தான் நிறைய உற்றுப்பார்க்கின்றன கண்கள்.
ஈசலுக்கும் திறந்திருக்கும் எப்போதும் இயற்கையின் வாசல்.


சீப்புக்குச் சிக்குவதில்லை எப்போதும் சிலமுடிகள்.


வனங்களை ரணமாக்கிவிட்டு போன்சாய் மரங்களைப் போற்றிப்பாடிக் கொண்டிருக்கிறோம்.


எரியும் மெழுகில் உருகும் ஒளியும் வழியும் வலியும்.



தொடங்கிவை தொடர்வார்கள் உன்னைத் தொடர்பவர்கள்,உண்மையாய் தொடர்பவர்கள்.
 

அன்புசெலுத்து அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி.


கம்புபற்றி மேல்எழும் வெற்றிலைக்கொடியாய் அன்புபற்றி வளரும் நம்மீதும்.
 

உன் பரிவட்டங்களைவிட உன் ஆளுமைகளைவிட அன்பின் ஆணிவேர் உயர்வானது.


வெறுப்பின் கருப்பு நம் முகத்தை இன்னும் குரூரமாக்குகிறது.


நதிநீரின் இறுதித்துளிகளை நம்பி ஏதோ ஒரு கடைசிமீன் காத்திருக்கலாம்.


அருகில் இருப்பவனையே அக்கரையோடு அன்புசெலுத்தாதவனின் தொலைநோக்கு நமக்கு அவசியமற்றதாகிறது.



அன்பின் விழிகள் அனந்தமயமானது..எப்போதும் இரட்டைக்கண்கள் ஒற்றை இலக்கையே ஒழுங்காகப் பார்க்கமுடியும்.






இன்னும் பகிர்வேன்..........